இலங்கையில் இன்னுமொரு இனக் கலவரத்தைத் தூண்டக் கூடிய, பிரிவினை வாத சக்திகளின் சூழ்ச்சிகள் சிறிது சிறிதாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இந்த இனக் கலவரம், இஸ்லாமியர்களையும் அவர்களது வளர்ச்சியையும் குறி வைத்திருக்கிறது. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந் நிலை தொடருமானால், இன்னும் சில தசாப்த காலங்களுக்குள் இலங்கையில் பெரும்பான்மையானோராக முஸ்லிம்கள் ஆகிவிடுவார்கள் என்ற அச்சம் இனவாத சக்திகளை பெருமளவில் அச்சுருத்தியிருக்கிறது. இந் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், முஸ்லிம்களை அடக்கி வைக்கவும் பல்வேறு விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.

முஸ்லிம்களுக்கு எதிராக இனத் துவேஷத்தைக் கிளப்பும் பற்பல நடவடிக்கைகள் காலம் காலமாக இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போதிலும், அண்மையில் பங்களாதேஷில் பௌத்தர்களுக்கு எதிராக நிகழ்ந்த சில வன்முறைகள், இலங்கையிலுள்ள முஸ்லிம்களையும் பகிரங்கமாக எதிர்ப்பதற்கு ஏதுவாக அமைந்தன. இலங்கையில், பங்களாதேஷ் வன்முறைகளுக்கான எதிர்ப்பு நடவடிக்கைகள் பொது பல சேனா இயக்கம் எனும் பௌத்த அடிப்படைவாத அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டன. இந்த இயக்கத்தின் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் அதிகளவில் பௌத்த பிக்குகளே உள்ளனர்.

ஒவ்வொரு மாதத்தினதும் பௌர்ணமி தினமானது, போயா எனப்படும் பௌத்தர்களின் புனித தினமாகும். இத் தினத்தில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஆணும், பெண்ணுமாக பௌத்த விகாரைகளில் நடைபெறும் மதப் போதனை நிகழ்வுகளில் வெண்ணிற ஆடையுடன் கலந்துகொள்வர். பௌத்த பிக்குகளால் நிகழ்த்தப்படும் போதனைகளுக்குள் முஸ்லிம் இன வெறுப்பை ஏற்படுத்தும்படியான பல விடயங்கள் பெரும்பான்மையான சிங்கள மக்களிடையே சிறிது சிறிதாக ஊட்டப்படுகின்றன. இவ்வாறாக விதைக்கப்படும் நச்சு விதைகள், எதிர்காலத்தில் பெருவிருட்சங்களாக மாறி, வெகுவிரைவில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனக்கலவரங்கள் ஏற்பட அவை காரணமாக அமையும்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இலங்கை குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் கொழும்பு நகரத்தில் வசிக்கும் மக்கள் தொகையில் அதிகளவானோர் சிங்களவர்கள் என்ற போதிலும் அந்த எண்ணிக்கை 24% வீதமாகக் குறைந்துள்ளதுஎனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2012.12.11 ஆம் திகதி வெளியான திவயின எனும் சிங்கள நாளிதழில் ‘2012 இன் குடிசன மதிப்பீட்டு அறிக்கைக்கு இணங்க கொழும்பு நகர மக்கள் தொகையில் 24% சிங்களவர்களாகவும், 33% தமிழர்களாகவும், 40% முஸ்லிம்களாகவும் உள்ளனர்என பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறாக இலங்கையில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, பௌத்த அடிப்படைவாத அமைப்பினைப் பின்பற்றுவோருக்கு பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. எதிர்வரும் காலங்களில், இந்த எண்ணிக்கை அதிகரித்துச் சென்று இஸ்லாமியர்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக ஆகி விடுவார்களோ என்ற எண்ணம் அவர்களைத் தடுமாற்றமடையச் செய்துள்ளது.

ஒப்பீட்டளவில் பார்க்கும்போது முஸ்லிம்களின் குடும்பங்களைப் பொறுத்த வரையில், அவர்கள் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையானது இலங்கையில் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிங்கள மக்கள், குடும்ப பொருளாதார நிலைமையைக் கருத்திற்கொண்டு ஒரு தம்பதியினர் ஓரிரு குழந்தைகளோடு நிறுத்திக் கொள்கையில், இஸ்லாமியர் மாத்திரம் எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி தமது இன விகிதாசாரத்தைக் கூட்டிச் செல்வது, அந்த அமைப்பினைப் பின்பற்றுவோரை பாரிய அளவில் சிந்திக்கச் செய்துள்ளது.

இந் நிலைமையை பிரதிபலிக்கும் விதமாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும், ‘கொழும்பில் சிங்களவர்கள் சிறுபான்மையினராகி முஸ்லிம், தமிழ் சமூகங்கள் பெரும்பான்மையாகியுள்ளதை நான் வலியுறுத்த வேண்டிய நிலை உள்ளதுஎன அவரது அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்ற முஸ்லிம் பிரமுகர்களினுடனான சந்திப்பின் போது தெரிவித்தமை இதனைத் தெளிவுபடுத்துகிறது.

பாதுகாப்பை பற்றி முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டர்களை உடனடியாக அகற்றுவதற்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். அதேவேளை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்ட பேரணிகளையோ ஊர்வலங்களையோ தடுக்க முடியாது. அவ்வாறு தடுப்பது ஜனநாயக விரோத செயற்பாடாக உள்ளதால் அரசாங்கத்தை அது நெருக்கடிக்கு உள்ளாக்கும். முஸ்லிம்களாகிய நீங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை எம்மிடம் முன் வைப்பது போல் ‘பொது பல சேனா’ எனும் அமைப்பும் வெளிநாடுகளில் முஸ்லிம்களுக்கு பர்தா அணிந்து முகம் மூடிச் செல்வதற்கு அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அதற்கு அனுமதி அளித்துள்ளீர்கள். முன்பு பல்கலைக்கழகங்களில் முகம் திறந்து பர்தா அணியாமல் வந்தவர்கள் இப்போது அவ்வாறு வருகின்றார்கள்.ஆகவே அதை தடுங்கள் என்பது போன்ற பல விடயங்களை சுட்டிக்காட்டி எமக்கு பல அழுத்தங்களை பிரயோகிக்கின்றார்கள்எனும் பாதுகாப்புச் செயலாளரது தொடர்ச்சியான கருத்து, சில எதிர்வுகூறல்களை முன்வைப்பதாக அமைகிறது.

 

 

 

 

 

 

 

இவ்வாறான முஸ்லிம் எதிர்ப்பு சக்திகள், பர்தா விவகாரத்தைப் போலவே முஸ்லிம்களுக்கு எதிராகக் கிளப்பிவிட்டிருக்கும் இன்னும் இரண்டு பிரதான விடயங்கள், முஸ்லிம்களது கல்வியும், வர்த்தக ரீதியில் அவர்கள் பயன்படுத்தும் ஹலால் நடைமுறைகளும் ஆகும். கல்வி நடவடிக்கைகளில் மிகவும் முன்னிலையில் முஸ்லிம்கள் இருப்பது இத் தீய சக்திகளை உசுப்பி விட்டிருக்கிறது.

அண்மைக் காலத்தில் நடைபெற்ற சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சையில் முஸ்லிம் மாணவர்கள் அதிகூடிய அளவில் சித்தி பெற்றிருப்பது பல ஆர்ப்பாட்டங்களைக் கிளப்பிவிட போதுமானதாக அமைந்திருக்கிறது. அவ்வாறே இலங்கை முஸ்லிம்கள் ஹலால் சான்றிதழ் வழங்கப்படும் பொருட்களை மாத்திரமே கொள்வனவு செய்வதானது, சிங்களவர்களது வர்த்தகத்தைப் பாதிக்கிறது எனும் கருத்தினை பரப்பி வருகிறது இந்த அமைப்பு. இதனால் எவ்வளவுதான் அவசரத் தேவைகள் ஏற்பட்டாலும் கூட, முஸ்லிம்களால் நடத்தப்படும் எந்தவொரு வர்த்தக நிலையத்திலும் எந்தப் பொருட்களையும் கொள்வனவு செய்ய வேண்டாமெனக் கட்டளையிடப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியன்று இலங்கையிலிருந்து வெளிவரும் திவயினநாளிதழின் முன்பக்க செய்தியானது இந் நடைமுறையின் ஒரு பகுதியைப் பிரதிபலிக்கிறது. ‘வர்த்தகப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் சர்வதேச தீவிரவாத இயக்கங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறதுஎன டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, ‘பொது பல சேனா இயக்கம் தெரிவித்துள்ள கருத்தினை அந் நாளிதழ் தனது பிரதான செய்திகளிலொன்றாக தந்திருந்தது.

அல்கைதா‘, ‘ஹமாஸ்போன்ற இஸ்லாமிய இயக்கங்களை நடத்திச் செல்வதற்கே இந்தக் கட்டணங்கள் செல்வதாகவும், இதனை ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் உடனடியாகக் கவனத்தில் கொண்டு, ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை தடை செய்ய வேண்டுமெனவும் அந்த இயக்கம் தெரிவித்த கருத்தின் மூலமாக வலியுருத்தியுள்ளது. அவ்வாறு நடைபெற சாத்தியமா? சர்வதேச இயக்கங்களான அவை, இலங்கையிலிருந்து அனுப்பப்படும் மிகவும் சொற்பமான பணத் தொகையிலா இயங்கும்? என்பது போன்ற எந்த சிந்தனையுமில்லாது அந்த அமைப்பு கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சிங்கள மக்கள் பெருகி வருகிறார்கள்.

2013 ஆம் ஆண்டுக்காக இலங்கை அரசு வெளியிட்டிருக்கும் காலண்டர் கூட, இந்த அமைப்பை மேலும் உசுப்பி விட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அரசால் வழங்கப்படும் காலண்டரில், மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில் வரும் பௌத்தர்களின் புனித தினமான போயா தினத்தை அரச, வங்கி, வர்த்தக விடுமுறை தினமாக அரசு அறிவித்திருக்கும். ஆனால் இந்த வருடம் வெளியிடப்பட்டுள்ள காலண்டரில், மாதந்தோறும் வரும் பௌர்ணமி போயா தினங்கள் அரச, வங்கி விடுமுறை தினங்களாக மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் கொந்தளிப்புற்ற பொது பல சேனா அமைப்பானது, ‘முஸ்லிம்களது பெருநாட்களை அரச, வங்கி, வர்த்தக விடுமுறை தினமாக அறிவிக்க முடியுமானால், ஏன் பௌத்தர்களின் புனித தினங்களை அவ்வாறு அறிவிக்க முடியாது?’ என இதிலும் இஸ்லாமியர்களை வம்புக்கிழுத்திருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது.

இலங்கையில் பெரும்பான்மையான சிங்கள மக்களும் முஸ்லிம்களைப் போலவே விலைவாசி, வரிக்கட்டணங்களின் அதிகரிப்பால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். என்றபோதிலும் முஸ்லிம் மக்களை விடவும் சிங்கள மக்களில் இதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது. காரணம் அவர்கள் சார்ந்திருக்கும் பல்வேறு விதமான கடன் சுமைகளாகும்.

கல்வி, வீடு, திருமணம், வாகனம், மருத்துவம் என அனைத்து பிரதான அம்சங்களுக்குமாக வங்கிகளையும், கடன் கொடுக்கும் நிறுவனங்களையும் அணுகி கடன்களைப் பெற்றுக் கொள்ளும் இவர்கள் தவணை முறையில் வட்டியுடன் அவற்றைச் செலுத்திச் செலுத்தியே சோர்ந்து போகிறார்கள். கடன்களுக்கான வட்டிகளில் தங்கியிராத இஸ்லாமியரின் வாழ்க்கை நெறிமுறை சிங்கள இனத்தவர்களுக்கு வியப்பினை ஏற்படுத்தியுள்ளதோடு, பொறாமையையும், இஸ்லாமியரின் வர்த்தக முறைமையில் சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள பொது பல சேனா அமைப்புபல்வேறு விதமான விஷமப் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக இலங்கையின் பிரதான நகரங்கள் பலவற்றில் இந்த இயக்கத்தின் தலைவரான கலகொட அத்தே ஞானஸார ஹிமியினால் பல கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான சுவரொட்டிகள் நகரெங்கிலும் ஒட்டப்பட்டிருக்கின்றமையைக் காணக் கூடியதாக உள்ளது. இவ்வாறான கூட்டங்களில் ஒன்றாக, கடந்த நவம்பர் மாதம் முப்பதாம் திகதி மஹரகம நகரத்தில் நடைபெற்ற கூட்டத்திற்காக பகிரப்பட்ட சுவரொட்டியில் இடம்பெற்றிருந்த கருத்துக்கள் விஷமத்தனமானவையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அவை இவ்வாறு சிங்கள மொழியில் அமைந்திருந்தன.

எனது தாய்நாடு! இன்று எனக்குரியது, நாளை உங்களுக்குரியது. சிங்களவர்களே! சிங்கள சமூகத்தின் அழிவு காலம் தொடங்கிவிட்டது. ஏனென்றால், சிங்கள சமூகத்திற்கும், பௌத்த மதத்திற்க்கும் பல சவால்கள் இருக்கும்போது சிங்கள பௌத்தர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில், முஸ்லிம் தீவிரவாதிகள் புராதன சின்னங்களையும், பாரம்பரியங்களையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த செயல்கள், எந்தவித முடிவும் இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் அதே நிலையில், நாட்டின் மற்ற பாகங்களுக்கும் இவை பரவிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கயவர்கள் இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்புக்களையும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சவால்கள் இத்தோடு நின்றுவிடவில்லை. கிறிஸ்தவர்கள், அவர்களின் பிரச்சார வேலைகளையும் ஆரம்பித்துள்ளார்கள். இந்தக் கயவர்களின் செயல்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைகளை, 30 நவம்பர் அன்று உங்களுக்கு தெளிவுபடுத்த முடியும் என நாம் நம்புகின்றோம். உங்கள் நாட்டையும், இனத்தையும், மதத்தையும், பாதுகாக்க விரைந்து வாருங்கள்!

இந்தக் கூட்டத்தில் இந்த இயக்கத்தின் தலைவரான கலகொட அத்தே ஞானஸார ஹிமியினால் நிகழ்த்தப்பட்ட உரையும், இஸ்லாமியர் மீதான அவர்களது கோபத்தையும், சூழ்ச்சிகளையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. உதாரணத்துக்கு அவரது உரையிலிருந்து சில பகுதிகளை இங்கு தருவதன் மூலம் இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளின் தீவிரத்தை உணரலாம்.

சிங்கள சமூகத்தை பாதுகாப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பள்ளிவாயலுக்கு கல் எறிவதனால் எதையும் சாதித்துவிட முடியாது. ஒரு முஸ்லிமுக்கு வீதியில் அடிப்பதன் மூலம் எதையும் நாம் அடைந்துவிட முடியாது. நாங்கள் மிகச் சிறந்த முறையில் திட்டமிட்டு, அவர்களின் ஆக்கிரமிப்பை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டும். இன்று இலங்கையில், நான்கு ஆயுதம் தாங்கிய குழுக்களைச் சேர்ந்த, 12000 ஆயுதம் தாங்கிய ஜிஹாதிகள் உள்ளனர். அவர்கள் மிக விரைவில் இலங்கைத் தீவை அதிகாரத்தின் மூலம் கைப்பற்றி விடுவார்கள். இந்த அச்சுறுத்தலை எதிர் நோக்குவதற்கு இங்கு உள்ள அனைவரும், 24000 சிங்கள வாலிபர்களைக் கொண்ட ஒரு இராணுவத்தை உருவாக்க வெளிக் கிளம்ப வேண்டும். நாம் அவர்களின் வழியில் சென்றுதான், அவர்களை தோற்கடிக்க வேண்டும். ஆசியாவில் உள்ள அனைத்து முஸ்லிம் தலைவர்களின் மாநாடொன்று அண்மையில் மாலைதீவில் நடைபெற்றது. இலங்கையைச் சேர்ந்த மூன்று நபர்கள் இதில் கலந்து கொண்டனர். அதில் அவர்கள், இலங்கை 2050 ஆம் ஆண்டளவில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக்கொண்ட ஒரு நாடாக இருக்குமென்று வாக்குறுதியளித்தனர். தம்பியாக்கள் எங்களுக்கெதிராக திட்டமிட்ட முறையில் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

என அவர் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்களும், சிங்களவர்கள், இஸ்லாமியர்களைத் திட்டுவதற்குப் பயன்படுத்தும் சொல்லான தம்பியாஎனும் சொல்லை பகிரங்கமாகக் கூறி சாடியிருப்பதுவும் முஸ்லிம்கள் எதிர்காலத்தில் சந்திக்கவிருக்கும் இனக் கலவரங்களுக்கான எதிர்வு கூறல்கள் என்பதனைத் தெளிவுபடுத்துகின்றன.

இவ்வாறான விஷமப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டங்களில் கலந்துகொள்ளும் சிங்கள இனத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதைப் போலவே இம் மோசமான கருத்துக்களை ஆதரிக்கும் பௌத்தர்களது இணையத்தளங்களும், சமூக வலைத்தளங்களும் தம் பக்கம் மக்களைச் சேர்த்துக் கொண்டே வருகின்றன.

இலங்கையின் முதலாவது சிங்கள முஸ்லிம் இனக் கலவரமானது, 1915 ஆம் ஆண்டில் கம்பளை நகரில் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றுள்ளது. அதன்பிறகு நாடெங்கிலும் இவ்வாறான பல அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெற்றுள்ள போதிலும் இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், 2001 ஆம் ஆண்டு மாவனல்லை நகரில் இஸ்லாமியர்களின் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்ற இனக் கலவரம் பிரதானமானது.

அவ்வாறான ஒரு கலவரத்தை, இலங்கையின் முதல் இனக் கலவரத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, எதிர்வரும் 2015 ஆம் ஆண்டும் ஏற்படுத்தி, கலவரத்தின் போது முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் குறைப்பது இவ்வாறான முஸ்லிம் எதிர்ப்பு அமைப்புக்களின் நோக்கமாக உள்ளது என்பது சிங்கள சமூக நல ஆய்வாளர்களது கருத்துக்களாக அமைந்துள்ளன.

பரவலான முறையில் நடைபெறப் போகும் இக் கலவரங்களுக்காக சிங்கள இனவாத அமைப்புக்களுக்கு ஆள் திரட்டும் நடவடிக்கைகளே கிராமங்கள், நகரங்கள் ரீதியாகவும், இணையத்தளங்கள் வாயிலாகவும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.

பௌத்த மதப் போதனைகளோடு இவ்வாறு பரப்பப்படும் தீய கருத்துக்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு பெரும் அச்சுருத்தலாக அமைந்துள்ளமையை இஸ்லாமியர்கள் அனைவரும் உணரவேண்டும். மறைந்திருப்பவை விஷப் பற்கள் அகற்றப்பட்ட பாம்புகள் அல்ல. எந் நேரத்திலும் வெடித்து, தீயாய்ப் பரவி, எரித்து விடக் கூடிய எரிமலைகள். எப்பொழுதும் அவை வெடிக்கலாம்.

இலங்கையின் சிங்கள இனவாதிகள் சிலரால் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்கள், இன்னுமொரு சிறுபான்மை இனமான தமிழின மக்களுடனான யுத்தத்துக்கு எவ்வாறு வழிகோலியது என்பதனை கடந்த காலங்களில் மிகவும் அதிகமாகக் காண முடிந்தது. அவ்வாறான நிலைமை முஸ்லிம் மக்களுக்கும் வரக் கூடும்.

முஸ்லிம்கள் எப்பொழுதும் அந்நிய மதத்தவரோடு ஒற்றுமையோடு இருப்பதனாலும், சிறு சிறு கலவரங்களின் போது விட்டுக் கொடுத்து நடந்து, பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலமுமே இவ்வாறான பெரிய கலவரங்களை ஆரம்பத்திலேயே அடக்கி விடக் கூடியதாக இருக்கும். எனவே இஸ்லாமியர்கள் எல்லோரும் கூர்மையான அவதானத்துடனும், சமூக நல்லுறவுடனும், ஒற்றுமையுடனும், இறை நம்பிக்கையுடனும் இருப்பதன் மூலம் மாத்திரமே இவ்வாறான சக்திகளைத் தோற்கடிக்க முடியும் என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

-03.03.2013

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

கறுப்பு ஜூன் 2014 Copyright © 2015 by எம்.ரிஷான் ஷெரீப் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book