இலங்கை, பல கலவரங்களைத் தொடர்ந்தும் கண்டிருக்கிறது. இந்து சமுத்திரத்தின் கண்ணீர்த் துளி எனக் கூறப்படக் கூடிய அளவுக்கு, இந் நாட்டு மக்களின் துயரானது பலராலும் அறியப்பட்ட ஒன்று. கடந்த காலங்களிலும் இன்றும் அடக்குமுறைக்கும், அநீதிகளுக்கும், அத்துமீறல்களுக்கும் ஆட்பட்டுக் கொண்டிருக்கேயிருக்கிறது நம் சமூகம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2001 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் திகதி, இலங்கை வரலாற்றில் இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் சிங்களமுஸ்லிம் கலவரமாகப் பதிவான, மாவனல்லை நகரத்தில் இடம்பெற்ற கலவரத்தைக் குறித்து இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இன வேறுபாட்டினை மனதில் கொண்டு நடந்த பெரும்பான்மை இனத்தவர்கள் பலரையும் வெளிப்படையாகக் காட்டிக் கொடுத்த இக் கலவரத்தைப் பற்றி, ஊடகவியலாளர் திரு. ராயிஸ் ஹசன் ஒரு விரிவான கட்டுரையை எழுதியிருக்கிறார். அவரது கட்டுரையின் சில பகுதிகளும், புகைப்படங்களும் பல உண்மைகளின் சான்றாக இங்கு பதிவாகின்றன.

மாவனல்லையை தீக்கிரையாகிய கறுப்பு மே

இலங்கை வரலாற்றில் சிறுபான்மை மக்களான தமிழ், முஸ்லிம் மக்களை இலக்காக வைத்து பெரும்பான்மையினத்தவரால் மேற்கொள்ளப்பட்ட பல வன்முறைகள், மறக்க முடியாத கறைகளாக வரலாற்றில் படிந்திருப்பவை. அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் மாவனல்லை நகரில், 2001 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம், இரண்டாம் திகதிகளில் நிகழ்த்தப்பட்டிருந்த வன்முறைகள் ஒட்டு மொத்த இலங்கை வாழ் முஸ்லிம்களினதும் கறுப்பு மேஎன அடையாளப் படுத்தப்படுகின்றன. மாவனல்லை இனக் கலவரமானது, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை ஒடுக்குவதற்காக, சிங்கள பேரினவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட சதியாகும்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் அடாவடி வார்த்தைகளின் விளைவாக அளுத்கம,பேருவளை நகரங்கள் எவ்வாறு தீக்கரையானதோ, அதே போன்று 14 வருடங்களுக்கு முன்பு சோம தேரர் என்பரின் இனவாதக் கருத்துக்கள் மாவனல்லை கலவரத்துக்கு வித்திட்டன என்பதை பலரும் அன்று சுட்டிக் காட்டியிருந்தனர்.

திட்டமிடப்பட்ட கலவரம்

பல வருட கால முயற்சியினால் தர்கா நகர், பேருவளை நகரங்களில் பொதுபலசேனா அமைப்பினால் அரங்கேற்றப்பட்ட கலவரம் போன்று, 1998ஆம் ஆண்டு முதல், மாவனல்லையிலும் சிங்கள தேசிய வாத அமைப்புகள்,  எப்படியாவது ஒரு கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டு வந்தன.

இன்றைக்கு கலகொட அத்தே ஞானசார தேரரைப் போன்று அன்று கங்கொடவில சோம தேரர் என்பவர் பிரபல சிங்கள தேசியவாதக் கொள்கையுடையவராக இனங்காணப்பட்டிருந்தார். அவர் 1999.09.27ஆம் திகதி இரவு டி.என்.எல். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். மாவனல்லை, பேருவளை மற்றும் கிழக்கின் பெரும் பகுதிகளில் ஜிஹாத்  அமைப்புகள் இருக்கின்றன. அது தவிர புத்தளத்தில் பள்ளிவாயல் ஒன்றில் ஆயுதக் கிடங்கொன்று இருக்கின்றதுபோன்ற அதிர்ச்சிகரமான தகவல்களைத் தெரிவித்து சாதாரண சிங்கள பொதுமக்களை குழப்பத்துக்குள்ளாக்கியிருந்தார்.

இதனால் மாவனல்லையிலும் சிங்கள தேசியவாதம் சற்று தலைதூக்க ஆரம்பித்ததுடன், பல சிங்கள மக்கள் இதன் பாதையில் வழி நடத்தப்பட்டனர். அப்போது மாவனல்லை நகரில் ஆணி வேராக ஊன்றியிருந்த முஸ்லிம் மக்களின் அதிகாரத்தை துடைத்தெறிய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பலர் இயங்கத் தொடங்கினர்.

இதன் காரணமாக மாவனல்லையில், சிங்களவர்களால் அடிக்கடி முன்பே திட்டமிட்ட சதித் திட்டங்கள் அரங்கேற்றப்பட்டு வந்ததுடன் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகிக் கொண்டேயிருந்தன.

அவற்றுள் சில,

  • 1998.10.18 – மாவனல்லை, ஹிங்குலோயா ஜும்மா பள்ளிவாசல் கதீப் மெளலவி. சாலிஹ், ஓவத்தை எனும் ஊரிலிருந்து வரும் போது, நாதெனிய பாலம் அருகில் 3 சிங்களவர்களினால் தாடியைப் பிடித்து இழுத்து தாக்கப்பட்டதுடன் அவரின் ஆடையும் கிழிக்கப்பட்டது.

  • 2000.01.06 – இலங்கை போக்குவரத்து சபை மாவனல்லைக் கிளையில் மேற்பார்வையாளராகக் கடமையாற்றி வந்த திரு.ராஸிக், சக ஊழியர்களினாலேயே கடுமையாகத் தாக்கப்பட்டார்.

  • 2000.04.24 – திரு. ஹபீழ் என்பவருக்கு சொந்தமான Citycom Communication அடித்து நொறுக்கப்பட்டது.

  • 2000.08.12 –கடலை வியாபாரி திரு. அத்தாப் என்பவருக்கு நகரில் வியாபாரம் செய்யாது தடுக்க மிரட்டல் விடுக்கப்பட்டதுடன், அவரின் கடலை வண்டியும் உடைக்கப்பட்டது.

  • 2000 ஆம் ஆண்டு ஹஜ் பெருநாள் தின இரவு, பழ வியாபாரி திரு.ராஸிக் என்பவரை, தம்மிடம் பழம் கொள்வனவு செய்வதில்லை எனக் கூறி தாக்கியதுடன் அவரின் கடைக்கும் சேதம் விளைவித்திருந்தனர்.

  • 2000.11.29 – ‘City Point’ ஜவுளிக் கடை உரிமையாளர் திரு.முபாரக் இந்தியா சென்றிருந்த போது, கடைக்குள் புகுந்த காடையர்கள் திரு.வஸீர் என்பவரை தாக்கியதுடன் கடையையும் அடித்து நொறுக்கியிருந்தனர்.

  • 2000.12.20 (நோன்பு 24) – பஸ் தரிப்பிட நிலையத்தில் வைத்து திரு.கபூர் என்பவரைத் தாக்கி, தொப்பியை சேற்றில் வீசி ஏறிந்து காலால் மிதித்தனர். இதனைத் தட்டிக் கேட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரி திரு. ஹாமீம் என்பவரின் கழுத்தை காடையர்கள் வெட்டினர். பின்னர் அவர் உயிர் பிழைத்தார்.

  • Muhammadia Night Hotel இல் கடனுக்கு சிகரட் கேட்டு கொடுக்காததால், உரிமையாளர் தாக்கப்பட்டதுடன் கடையும் உடைக்கப்பட்டது. அன்று முதல் அக் கடை மூடப்பட்டது.

  • மற்றுமொரு Night Hotel இல் கொழும்பிலிருந்து வந்த முஸ்லிம் பிரயாணிகள் சிலர் உணவருந்தும் போது கேலி செய்து வம்புக்கு இழுத்த காடையர்கள், அவர்களது வாகனத்தின் முன் கண்ணாடியை அடித்து நொறுக்கி துரத்தியடித்தனர்.

இவை போன்ற பல அநீதமான சம்பவங்களையும், வன்முறைகளையும் நிகழ்த்தியதோடு பேரினவாத காடையர்கள், முஸ்லிம் வியாபார நிலையங்கள்,  முஸ்லிம் முச்சக்கர வண்டி சாரதிகளிடமிருந்து பலவந்தமாக கப்பம் பெற்று வந்தனர். அத்துடன் பொது இடங்களில் முஸ்லிம் பெண்களை அவமானப்படுத்தும் முயற்சிகளும், அவர்களது ஆடைகளை இழுத்த சம்பவம்களும் நிறையவே பதிவாகிக் கொண்டிருந்தன.

இவ்வாறான அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் முஸ்லிம் தரப்பினர் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என அஞ்சி அடங்கிப் போனார்கள். இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்தது தவிர, அவர்கள் வேறு வழிகளை நாடவில்லை. அவ்வாறே, சிங்கள தேசியவாதப் பிடியில் சிக்கியிருந்த சில உள்ளூர் அரசியல்வாதிகளின் அனுசரனையினாலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுகின்றமையினால், பொலிஸாரும் இவற்றுக்கெதிராக நடவடிக்கை எடுக்காது சற்றுப் பின்வாங்கியிருந்தனர். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட வேண்டிய பொலிஸாரே இவ் விடயத்தில் பின்வாங்குகின்றமையினால் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை முஸ்லிம்கள் இழந்திருந்தனர். இந்நிலையில், 2001 ஏப்ரல் மாதம், 30 ஆம் திகதி இடம்பெற்ற ஓர் சம்பவத்தினால் முஸ்லிம் மக்கள் பொறுமை இழந்து நியாயம் கோரி பாதை இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட இனவாதிகள், இணங்கி வாழ்ந்த மக்களிடையே பிணக்கை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தனர்.

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பார்கள். காடையர்களின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்! பொலிஸாரின் அசமந்தப் போக்கை இல்லாது செய்ய வேண்டும்! பாதிக்கப்பட்ட முஸ்லிம் தரப்பினருக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்! என்ற நிலைப்பாட்டில் முஸ்லிம் மக்கள் உறுதியாக இருந்தனர்.

நடந்தது என்ன?

முஸ்லிம்களின் பொருளாதாரம் தலைதூக்கக் கூடாது, மாவனல்லை நகரில் அம் மக்களுக்குள்ள அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக, பேரினவாத அரசியல் வாதிகளின் அடியாட்களாக பயன்படுத்தப்பட்ட காடையர்கள் சிலர்2001 ஏப்ரல் மாதம், 30 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தைப் போன்ற ஒரு தருணத்துக்காகவே காத்திருந்தனர்.

திங்கட் கிழமை, வழமைக்கு மாறாக மாவனல்லை நகரில் ஜன நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.  நாளைய தினம் (மே 1) விடுமுறை தினம் என்பதால் இந் நிலைமை காணப்பட்டதுடன் வியாபாரமும் சற்று மந்த கதியிலேயே இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

இருப்பினும், வெசாக் தினங்களை முன்னிட்டு, ஒரு வார காலம் மதுபான சாலை மூடப்பட வேண்டியிருந்தமையினால் அங்கு மாத்திரம் கூட்டம் களைக்கட்டியிருந்தது. குடிபோதையில் வந்த சில காடையர்கள், வழமையைப் போன்று முஸ்லிம் கடைகளில் கப்பம் பெற்றுச் செல்ல வந்தனர்.

மாவனல்லை, பஸ் தரிப்பிடத்துக்கு முன்னாலிருக்கும் 24 ஆம் இலக்க ஹோட்டலுக்குள்ளும் காடையர்கள் புகுந்தனர். வியாபாரம் மந்த கதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தமையினால், இரவு 8.45 மணியளவில் ஹோட்டலை மூடிவிடும் எண்ணத்தில், ஊழியர்கள் உட்பட உரிமையாளரும் விறுவிறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இந் நிலையில், காடையர்கள் கப்பப் பணத்தைத் தருமாறு உரிமையாளரை அச்சுறுத்தினர். அதற்கு அவர் இன்று வியாபாரம் இல்லை. அதனால் தர முடியாது என்று கூற, வந்த காடையர்களில் ஒருவன் முணுமுணுத்தவாறு 20 ரூபாவை ஹோட்டல் உரிமையாளரின் முகத்தில் எறிந்து சிகரெட் ஒன்றைக் கேட்டுள்ளான். அதற்கு உரிமையாளர், அவர் கேட்ட சிகரெட் இல்லையெனவும், வேறு ரக சிகரெட்தான் உள்ளது எனவும் கூற, அதைக் கேட்டு வாங்கிக் கொண்ட காடையர்கள், ஹோட்டல் உரிமையாளர் மீதிப் பணத்தைக் கொடுத்த போது, தூசண வார்த்தைகளால் அவரை ஏசத் தொடங்கினர். உரிமையாளர் ஏன், எதற்காக ஏசுகிறீர்கள்என்று கேட்டதும் அவரைத் தாக்கத் தொடங்கினர்.

ஹோட்டல் உரிமையாளரைத் தாக்கத் தொடங்கியதும், அவரைப் பாதுகாக்க வந்த சக ஊழியர்கள் இருவரையும் கூட காடையர்கள் கடுமையாகத் தாக்கத் தொடங்கியதோடு, ஹோட்டலையும் அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். அத்தோடு நின்று விடாது, உரிமையாளரை மாவனல்லை நகர பஸ் நிலையத்தில் அமைந்துள்ள மணிக் கூண்டு கோபுரத்துக்கு முன்பாக இழுத்துச் சென்று, அங்கு அவரை கம்பியொன்றில் கட்டி வைத்து, பெரும் திரளான மக்கள் மத்தியில் அடித்து சித்திரவதை செய்தனர்.

முடியுமாயின் எந்த முஸ்லிமாவது வந்து இவனைக் காப்பாற்றி அழைத்துச் செல்.. பார்க்கலாம்என்று காடையர்கள் சவால் விட்டதுடன், அவரின் முகத்தில் கத்தியால் வெட்டினர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துடன் இந்தச் சம்பவம் தொடர்பில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

இவ்வளவு காலமும் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட எம்மை இனியும் ஒடுக்க முடியாது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் நியாயமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்!எனக் கூறி ஒன்றுபட்ட மாவனல்லை முஸ்லிம்கள், 2001, மே மாதம் முதலாம் திகதி மாலை ஆகியும் பொலிஸார் குற்றவாளிகளை கைது செய்யாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாவனல்லை பஸ் நிலையத்துக்கு முன்னால் எல்லோரும் ஒன்று திரண்டனர்.

இதற்கிடையில், இந்த விடயத்தை திரிபுபடுத்திய சிங்கள பேரினவாதிகள், ‘முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்றிணைந்து சிங்களவர்களைத் தாக்க ஆயத்தமாவதாகவும், தாய் நாட்டை பாதுகாக்க சிங்களவர்கள் ஒன்றிணையுமாறும்சாதாரண சிங்களப் பொதுமக்களிடையே வதந்திகளைப் பரப்பியிருந்தனர்.

நீதி கேட்டு முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடியிருந்த இடத்துக்கு வந்த பொலிஸார்,நாளைய தினம் (மே 2) விடிவதற்கு முன்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று முஸ்லிம்களிடம் வாக்குறுதியளித்ததன் பிறகு, இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். எனினும், குற்றவாளிகள் தலைமறைவாகியிருந்தமையினால், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய எவரையும் பொலிஸார் கொடுத்த வாக்குறுதிக்கமைய கைது செய்ய முடியாது போனது. இந் நிலையில், 2001, மே மாதம் இரண்டாம் திகதி, பொலிஸார் வாக்குறுதியளித்தபடி நடந்துகொள்ளவில்லையாதலால், அவர்கள் நீதமாக நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமைதியான போராட்டம் ஒன்றை முன்னெடுக்க, முஸ்லிம்கள் முன் வந்தனர்.

இந் நிலைமையை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சிங்களப் பேரினவாதிகள், நகரில் அமைந்திருக்கும் சிங்களப் பாடசாலையின் பின்புறத்திலிருந்த ஒதுக்குப்புறமான இடமொன்றில், ஆயுதங்களுடன் சிலரைத் தயார்படுத்தி வைத்திருந்துள்ளதுடன், சிங்களவர்கள் தாக்குதலுக்கு தயாராகுமாறு பல இடங்களுக்கும் தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் நகர மத்தியில் முஸ்லிம்கள் கூடியிருந்த இடத்திலிருந்த புத்தர் சிலையை மூடியிருந்த கண்ணாடியை, பேரினவாதி ஒருவன் தாக்கி விட்டு ஓட, இதனை முஸ்லிம்கள்தான் செய்தார்கள் என்று சிங்களவர்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்பி, அவர்களை குழப்பி கலவரத்தைத் துவக்கி விட்டனர் பேரினவாதிகள்.

எதுவுமறியாது நகரில் கூடியிருந்த முஸ்லிம்கள் மீது திடீரென பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பிக்க, பொலிஸாருடன் இணைந்து சிங்கள மக்களும், முஸ்லிம்களைத் தாக்க ஆரம்பித்தனர்.

இதற்கிடையில் முஸ்லிம்களின் கடைகளை அடித்து நொறுக்கும் வேட்டையில் இறங்கிய இனவாதிகள், தீ வைத்தும், கொள்ளையடித்தும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சூறையாடும் படலத்தை பொலிஸாரின் எதிரிலேயே அரங்கேற்றினர். நகரிலிருந்த பள்ளிவாசல்களும், முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்களும் பற்றியெரிந்தன.

தங்களுடைய உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக முஸ்லிம்களும் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மாவனல்லை நகரில் உருவான வன்முறைகள் மிக வேகமாக, அதற்கு அண்டிய முஸ்லிம் ஊர்களான அரநாயக்க, திப்பிட்டிய, ஹெம்மாத்தகம, கனேத்தன்ன, பத்தாம்பிட்டிய போன்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. இதனால் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பும், பொருளாதாரமும் கேள்விக்குறியாகின.

இந் நிலையில், பேரினவாதிகள் முஸ்லிம் கிராமங்களுக்குள் ஊடுருவுவதைத் தடுக்க ஒன்றிணைந்த கிருங்கதெனிய கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ஊரின் நுழைவாயில்களுள் ஒன்றான Thalib Drive கட்டிடத் தொகுதியில் ஒன்றிணைந்து, சிங்களவர்கள் நகருக்குள் முன்னேறாமல் தடுக்கும் வகையில் கற்களினால் தாக்குதல்களை மேற்கொண்டதோடு, நகரில் ஏனைய பகுதிகளிலும் பல முஸ்லிம் இளைஞர் குழுக்கள் இவ்வாறாகக் கூடி, தமது ஊர்களைப் பாதுகாக்க முற்பட்டனர்.

ஆட்டம் கண்ட அரசு

ஒரு சில மணித்தியாலங்களுக்குள் இச் சம்பவமானது, இலங்கை மாத்திரமல்லாது உலக நாடுகள் பலவற்றினதும் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனால் அப்போதைய சந்திரிக்கா அரசு, இதனைத் தடுப்பதற்கான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது. விஷேட பொலிஸ் குழு கொழும்பிலிருந்து அனுப்பப்பட்டதுடன், முழு நேர ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் மாவனல்லை நகரம் கொண்டு வரப்பட்டது. உடனடியாக பாராளுமன்றம் கூட்டப்பட்டதோடு கலவரம் சம்பந்தமாக, விசேட கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டன. அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு நேரடி விசேட உரையொன்றை நிகழ்த்தி, நாட்டு மக்களிடையே அமைதியையும், நல்லிணக்கத்தையும் வலியுறுத்தியினார்.

இதேவேளை, அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், பெளசி உள்ளிட்ட முஸ்லிம் அரசியல் தலைமைகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து, மக்களுக்கு பக்கபலமாக இருந்ததுடன், ஆறுதல் வார்த்தைகளையும் கூறியிருந்தனர். அத்தோடு பாதிக்கப்பட்ட மாவனல்லை மக்களுக்காக, கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் பிற பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் செய்யவும் முனைந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல பகுதிகளில் விசேட துஆ பிரார்த்தனைகள், நோன்புகள் என்பன நிறைவேற்றப்பட்டன. இதனை இன்றும் மாவனல்லை மக்கள் நன்றியுடன் நினைவு கூறுகின்றனர்.

உள்நாட்டுப் பத்திரிகைகளுக்கு நிகராக, வெளிநாட்டுப் பத்திரிகைளிலும் இச் சம்பவம் குறித்து பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதனால் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்துடன், இதற்காக பல நாடுகளும் குரல் கொடுத்திருந்தன.

இதனால் அரசு, இந்தச் சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி நியாயமான விசாரணையொன்றை முன்னெடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்கவும், இழப்பீடுகளை வழங்கவும் முன்வந்தது.

ஈடுசெய்ய முடியா இழப்புக்கள்

முஸ்லிம்களின் பொருளாதாரத்தை ஒடுக்க வேண்டும். நகரில் அவர்களிடமுள்ள அதிகாரத்தை இல்லாது செய்ய வேண்டும் போன்ற காரணங்களினால் பல வருடங்களாக பின்னப்பட்ட சதி வலையில் சிக்குண்ட மாவனல்லை முஸ்லிம் மக்கள் இந்த வன்முறையினால் இழந்தவை ஏராளம்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டினால் இருபதுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகாயங்களுக்குள்ளானதோடு, ஒருவர் மரணமடைந்திருந்தார். அது தவிர பல முஸ்லிம்கள் பொய்க் குற்றச்சாட்டில் சிறை பிடிக்கப்பட்டு சில காலத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

மாவனல்லை நகரம், இனவாதிகளின் அட்டூழியத்தினால் சூறையாடப்பட்டிருந்ததுடன் தீக்கரையாக்கபட்டுமிருந்தது. அதில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பெற்றோல் நிலையம், வரவேற்பு மண்டபங்கள், அரிசி ஆலைகள், இறப்பர் தொழிற்சாலை, ஆடைத்தொழிற்சாலைகள் என நூற்றிருபதுக்கும் மேற்பட்ட வியாபார நிலையங்கள் எரித்து நாசமாக்கப்பட்டன. இதனால் கோடிக்கணக்கான நஷ்டங்கள் ஏற்பட்டன.  அப்போது வெளி வந்த சஞ்சிகையொன்றில் சுமார் 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டிருந்தன என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், கனேதன்ன ஜும்ஆப் பள்ளிவாசல் உட்பட இரண்டு பள்ளிவாசல்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததுடன், அங்கிருந்த குர்ஆன் பிரதிகள் எரித்து சாம்பலாக்கப்பட்டிருந்தன. பள்ளியின் நீர்த் தாங்கியில் சிறுநீர் கழிக்கப்பட்டு அசிங்கம் செய்யப்பட்டிருந்தது. அத்தோடு அப் பள்ளிவாசல்களில் இருந்த வரலாற்று சிறப்புமிக்க ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவை தவிர சிங்களக் கிராமங்களின் எல்லைகளில் அமைந்திருக்கும் பள்ளிவாசல்கள் பல, தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தன.

இவ்வாறாக, இந்தக் கலவரத்தின் முடிவில் முஸ்லிம்கள் அனைவரும் பல விதத்திலும், பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். எதிர்காலம் கேள்விக்குறியுடன் தரித்து நின்றது. சந்திரிக்கா அரசு, அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்கி ஆறுதல்படுத்த முனைந்தது.

அரசியல் தலைமைகளின் அப்போதைய கருத்துக்கள் !

  • அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க (வீரகேசரி பத்திரிகை – 06.05.2001) :

அண்மையில் இடம்பெற்ற மாவனல்லை வன்முறைச் சம்பவங்கள் திடீரென நிகழ்ந்த சம்பவங்கள் எனக் கூற முடியாது. இவை சில சக்திகளால் திட்டமிட்டு செய்யப்பட்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.’

  • அமைச்சர் ரவூப் ஹக்கீம் (வீரகேசரி பத்திரிகை – 07.05.2001) :

‘……. சம்பவங்கள் திட்டமிட்ட அடிப்படையிலேயே நடந்திருக்கின்றன. எனவே, இதில் சம்மந்தப்பட்ட யாராக இருந்தாலும், அவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு.’

  • அமைச்சர் அலவி மெளலானா (தினகரன் 03.05.2001) :

பொலிஸார் தங்களுடைய கடமைகளை பொறுப்புடன் செய்யத் தவறியதாலேயே மாவனல்லையில் கலவரங்கள் மோசமடைந்தன.

License

Icon for the Creative Commons Attribution 4.0 International License

கறுப்பு ஜூன் 2014 Copyright © 2015 by எம்.ரிஷான் ஷெரீப் is licensed under a Creative Commons Attribution 4.0 International License, except where otherwise noted.

Share This Book